Sivavakkiyar Siddhar in his songs explains where is shiva.
சிவன் எங்கே இருக்கிறார்? சித்தர் சிவவாக்கியர் பாடல் விளக்கம்:-
கடவுளைத் தேடி ஓடி கண்டுபிடிக்க முடியாமல் அலைபவர்கள் பற்றியும் அந்தக் கடவுள் எங்கிருக்கிறார் என்பது பற்றியும் சிவவாக்கியர் சித்தர் தனது பாடல்களில் விளக்கமாக பாடியுள்ளார்.
ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த சோதியை
நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்து போய்
வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள்
கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே (3)
அருட்பெருஞ் சோதியான ஆண்டவனாகிய ஈசனை அங்கும் இங்கும் ஓடி ஓடி தேடுகின்றீர்கள். அவன் உங்கள் உடம்பின் உள்ளே கலந்து சோதியாக ஓடி உலாவுவதைக் காணாது, அவனை தேடி, நாடி பற்பல இடங்களுக்கும் ஓடி ஓடி தேடியும் அலைந்தும் காண முடியாமல் உங்கள் ஆயுள் நாட்களை கழித்துக்கொண்டு உள்ளீர்கள் . அவனை ஞான நாட்டத்துடன் நாடி அச்சோதியாகிய ஈசன் நம் உடலிலேயே உட்கலந்து நிற்பதை என்று உணர்ந்து கொள்வீர்கள்?, பெறற்கரிய இம் மானிடப் பிறவியை பெற்ற நீங்கள் என்றுதான் சோதியாக இறைவன் தம்முள்ளே கலந்து நிற்பதை உணர்ந்து கொள்வீர்களோ? தம்முளே உறையும் உயிரை அறியாமல் அவ்வுயிரை ஈசனிடம் சேர்த்து பிறவா நிலை பெற முயலாமல், அவனை அகிலமெங்கும் தேடி ஓடி, நாடி, வாடி இறந்து போகிறீர்களே.
இப்படி உடம்பினுள்ளே ஈசன் அருட்சோதியாக உலாவுவதை அறிந்து ,உணர முயற்சிக்காமலே. இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ தேடி அலைந்து, திரிந்து ஆயுளும் முடிந்து மாண்டு விடுகின்றனர். இப்படிப் பட்டவர்களே பல கோடி பேராக உள்ளனர் என்கிறார் சிவவாக்கியர்.
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்தது இல்லையே
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்து கொண்டபின்
என்னிலே இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ
என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டனே (6)
எனக்குள்ளே ஒன்றான மெய்ப்பொருளாக இறைவன் இருக்கின்றான் என்பதை நான் முன்பு அறிந்து கொள்ளவில்லை. நானும் அப்பரம்பொருளை பற்பல இடங்களுக்கும் ஓடி ஓடி தேடியும் அலைந்தும் காண முடியவில்லை, பின்னர் நல்ல நூல்களைப் படித்தும், நல்லோரிடம் பழகியும், நல்ல குருநாதர் மூலம் அப்பரம்பொருள் உடலிலேயே உட்கலந்து இருப்பதை யான் அறிந்து கொண்டேன். அதேபோல் தனக்குள் இருக்கும் உயிரை அறிந்து அதனுள் இருக்கும் ஈசனை காண அனைவருக்கும் வல்லமை உண்டு.
நம் உடம்பினுள்ளே ஈசன் அருட்சோதியாக இருப்பதை எப்படி உணர்ந்து கொள்ளவது அதற்கு நாம் என்ன செய்யவேண்டும்? இதற்கான விடைகளை சிவாக்கியர் மற்றும் அகத்திய பெருமான் பாடல்கள் மூலம் நமது அடுத்த பதிவில் பார்க்கலாம்.
#aalayamselveer #sivavakkiyarpadal
Негізгі бет சிவன் எங்கே இருக்கிறார்? சித்தர் சிவவாக்கியர் பாடல் விளக்கம் | Sivavakkiyar Padal Tamil
Пікірлер: 210